261. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்
இறைவன் சங்கமேஸ்வரர், சங்கமுகநாதேஸ்வரர்
இறைவி வேதமங்கை
தீர்த்தம் பவானி, காவிரி, அமுதநதி
தல விருட்சம் இலந்தை
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருநணா, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'பவானி' என்று அழைக்கப்படுகிறது. ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Bhavani Gopuramஇத்தலத்து இறைவனை வழிபட்டால் எந்தவித தீங்கும் நண்ணாது (நெருங்காது) என்பதால் இத்தலம் 'திருநணா' என்று அழைக்கப்படுகிறது. காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆவதால் இத்தலத்து மூலவர் 'சங்கமேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி என்னும் ஐந்து மலைகளுக்கிடையில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் 'சங்கமேஸ்வரர்', 'சண்முகநாதேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வேதநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். இருவரது சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. இதை 'சோமாஸ்கந்த காட்சி' என்று கூறுவர்.

பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஜுரஹரேஸ்வரர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், ஆதிகேசவப் பெருமாள், சௌந்தரவல்லி தாயார், துர்க்கை, சனி பகவான், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ரதசப்தமிக்கு மூன்றாம் நாள் சூரியனின் கதிர்கள் இறைவன் மீது விழும் சூரிய பூஜை நடைபெறுகிறது.

இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் முன்னோர்களுக்கு உரிய பித்ரு காரியம் தலமாக விளங்குகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வழிபடுகின்றனர்.

1802 ஆம் ஆண்டில் ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ என்பவரை இத்தலத்து அம்பாள் சிறு பெண்ணாக வந்து ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றியதால், அவர் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் தந்தத்தால் ஆன கட்டில் ஒன்றைச் செய்து இக்கோயிலுக்கு வழங்கியுள்ளார்.

பராசரர், விஸ்வாமித்திரர், குபேரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com